ஆண்டவராகிய இயேசு கப்பர்நகூமில் இருந்தபோது நடந்த ஒரு அற்புதமான சம்பவம் இன்றும் நம் வாழ்வுக்குப் பெரிய பாடத்தைக் கற்றுத் தருகிறது. நான்கு நண்பர்கள் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்து கொண்டு இயேசுவிடம் வருகிறார்கள். ஆனால் அங்கே இருந்த கூட்டமோ மிக அதிகம்; உள்ளே நுழையவே வழியில்லை. சாதாரணமாக யாராவது இருந்தால் "சரி, அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்" என்று கிளம்பியிருப்பார்கள். ஆனால் இந்த நான்கு பேரும் விடவில்லை. எப்படியாவது தங்கள் நண்பன் சுகமாக வேண்டும் என்ற வைராக்கியத்துடன், வீட்டின் மேற்கூரையைப் பிரித்து, படுக்கையோடு அவனை இயேசுவின் முன்னே இறக்கினார்கள்.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இயேசு அந்தத் திமிர்வாதக்காரனின் விசுவாசத்தைப் பார்த்ததாக வேதம் சொல்லவில்லை. மாறாக, அவனைக் கொண்டு வந்தவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, அவனைச் சுகமாக்கினார் என்று வாசிக்கிறோம். இன்று நாமும் நம்மைச் சுற்றி நோயினால் தவிப்பவர்களைத் தாங்கும் விசுவாசம் கொண்டிருக்கிறோமா? அவர்களை இயேசுவிடம் கொண்டு செல்ல முயற்சி செய்கிறோமா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வல்லமை தரும் தேவன்
இயேசு பிரசங்கம் செய்து கொண்டிருந்த போதே, அங்கே பிணியாளிகளைக் குணமாக்கத்தக்க கர்த்தருடைய வல்லமை விளங்கியது (லூக்கா 5:17). ஆம் பிரியமானவர்களே, தேவனுடைய வசனத்திற்கே சுகமாக்கும் வல்லமை உண்டு. "அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்குகிறார்" (சங். 107:20). நாம் விசுவாசத்தோடு அந்த வசனத்தைக் கேட்கும்போது நம் வாழ்வில் அற்புதங்கள் நடக்கும்.
உள்ளத்தை அறிந்த இயேசு
மேற்கூரை வழியாக இறக்கப்பட்ட அந்த மனிதன் தன் உள்ளத்தில் என்ன நினைத்திருப்பான்? ஒருவேளை, "இத்தனை பேர் முன்னால் இப்படி இறக்குகிறார்களே, நான் ஒரு பாவியாயிற்றே, ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வாரோ?" என்று கலங்கியிருக்கலாம். நம்முடைய உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும் பயத்தையும் கவலைகளையும் அறிந்த ஆண்டவர், அவனைப் பார்த்தவுடன் முதலில் சொன்ன வார்த்தை: "மகனே, திடன்கொள்".
அவரைத் தேடி வரும் எவரையும் அவர் தள்ளுவதில்லை. அவன் ஒரு பாவியாக இருந்தாலும், அவனை 'மகனே' என்று அன்போடு அழைத்து, அவன் மனதிலிருந்த பாரத்தை முதலில் நீக்கினார்.
பாவ மன்னிப்பும் உடல் சுகமும்
அந்த மனிதனுக்குச் உடல் சுகம் கிடைப்பதற்கு முன்பே, "உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது" என்று இயேசு சொன்னார். இதிலிருந்து நாம் ஒரு உண்மையை விளங்கிக் கொள்ளலாம். நம்முடைய ஆத்தும மீட்பு, நம்முடைய சரீர சுகத்தை விட மிக முக்கியமானது. பல நேரங்களில் நாம் தற்காலிகமான உடல் நலத்திற்காக மட்டுமே இறைவனைத் தேடுகிறோம். ஆனால், நம் ஆத்துமா தேவனோடு சமாதானமாக இருப்பதே நிரந்தர ஆசீர்வாதம்.
சங்கீதம் 103:3 சொல்கிறது: "அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி...". முதலில் மன்னிப்பு, பிறகுதான் சுகம்.
இறுதியாக ஒரு எச்சரிக்கை
பெதஸ்தா குளத்தருகே சுகம் பெற்ற மனிதனிடம் இயேசு பின்னர் சொல்லும்போது, "இனி பாவஞ்செய்யாதே, கேடானதொன்றும் உனக்கு வராதபடி எச்சரிக்கையாய் இரு" என்றார். இன்று அநேகர் சுகம் கிடைத்தவுடன் ஆண்டவரை மறந்து பழைய பாவ வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. நாம் பெற்றுக்கொண்ட சுகம் நிலைத்திருக்க வேண்டுமானால், நம் புனிதமான வாழ்வு தொடர வேண்டும்.
சகோதர சகோதரிகளே!
உங்கள் வாழ்க்கையிலும் நீண்ட நாள் வியாதிகளோ அல்லது மனப் போராட்டங்களோ இருக்கலாம். முதலில் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு ஆண்டவரிடம் மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் சிலுவையில் நம் அக்கிரமங்களுக்காக மட்டும் அல்ல, நம் நோய்களுக்காகவும் தழும்புகளை ஏற்றார். அந்த விசுவாசத்தோடு அவரிடம் வாருங்கள், அவர் உங்கள் உள்ளத்திற்கும் உடலுக்கும் நிச்சயம் இளைப்பாறுதலைத் தருவார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இந்த பதிவை மற்றவர்களுக்கு பகிருங்கள். மேலும், உங்களுக்கு ஜெப உதவி தேவைப்பட்டால் எங்களைத் தொடர்புக் கொள்ளுங்கள் contact: Thomas 9840200363 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
