| Thomas by Ai Image |
இஸ்ரவேல் புத்திரரின் வனாந்தரப் பிரயாணத்தில் மோசே தேவனை நோக்கி, "உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும். எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும்" (யாத் 33:15, 16) என்று மன்றாடினான். அப்பொழுது அவர், "நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது" என்று அவனிடம் கூறினார்.
இம்மாதம் துவக்கத்தில், "ஆண்டவரே, புதிய மாதத்தில், இனிவருகிற நாட்களிலும் நீர் என்னோடு கூடவே இருக்க வேண்டும்; உம்முடைய சமுகம் என்னோடுகூடச் செல்லாமற்போனால், என்னால் இவ்வாண்டைக் கடந்துசெல்ல இயலாது" என்ற கதறுதலுடன் தேவனை நோக்கிப்பார்த்துக் கொண்டிருக்கும் தேவபிள்ளையே, "என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்" (வச. 14) என்று அவர் உனக்கும் வாக்குப்பண்ணுகிறார். "என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும்" என்பது ஆங்கில மொழிபெயர்ப்பில், 'என் சமுகம் உன்னோடுகூடச் செல்லும்' (My presence will go with you) என்றே கூறப்பட்டுள்ளது.
தங்களோடு கூட வழிநடந்துகொண்டிருந்தவர் தங்கள் ஆண்டவராகிய இயேசுவே என்பதை அறியாமலேயே எம்மாவு என்னும் கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு சீஷர்கள் அந்தக் கிராமத்தைச் சமீபித்தபோது, ஆண்டவராகிய இயேசு அப்புறம் போகிறவர் போல அவர்களுக்குத் தம்மைக் காண்பித்தார். அவர்கள் அவரை நோக்கி, "நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று" என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார் என்று நாம் வாசிக்கிறோமே! (லூக்கா 24:28, 29). உன் உள்ளான வாஞ்சையை அறிந்திருக்கும் உன் ஆண்டவர், "நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" என உன்னை நோக்கிக் கூறுகிறார்.
பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களுடன் தேவன் இருந்தார். மனச்சாட்சிக் காலத்தில் ஜீவித்த ஏனோக்கு, நோவா ஆகியோர் தேவனுடன் சஞ்சரித்துக்கொண்டிருந்தார்கள். "தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்" என்பது தாவீதின் அறிக்கையாயிருந்தது. ஆசாப் என்னும் சங்கீதக்காரன், "நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்" என்று கூறுகிறான். எலியா, எலிசா ஆகியோர், 'இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிறவர்கள்' என்று தங்களைக் குறித்துக் கூறுகிறார்கள் (1 இராஜா. 17:1; 2 இராஜா. 3:14).
இப்புதிய ஏற்பாட்டுக் காலத்தில், அது நாமே தேவன் தங்கும் அவருடைய வாசஸ்தலமாக மாற்றப்படுகிற அனுபவம். இவர்கள் எல்லாரையும் பார்க்கிலும் மேன்மையான அனுபவமாகும். அது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?" (1 கொரி 3:16) என நாம் வாசிக்கிறோமே! இதனையே கர்த்தராகிய இயேசு, "நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்" (யோவான் 14:20) என்று கூறியிருக்கிறார்.
ஆம்! பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் நாம் திரியேக தேவன் தங்கியிருக்கும் வாசஸ்தலமாயிருக்கிறோம். கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருக்கிறார். இது தேவசமுகம் நமக்கு முன்செல்வதைக் காட்டிலும், தேவசமுகம் நம்மோடு கூடவே இருப்பதைப் பார்க்கிலும் மிகவும் விசேஷமானதோர் அனுபவமாகும்.
இது நாமே கர்த்தருடைய வாசஸ்தலமாக இருக்கிற - நாம் கர்த்தருக்குள்ளும், கர்த்தர் நமக்குள்ளும் இருக்கிற - மேன்மையானதோர் அனுபவமாகும்.
தேவசமுகம் இஸ்ரவேலருக்கு முன்செல்லுமாயின் அல்லது தேவன் அவர்களோடே கூட இருப்பாராயின் - இளைப்பாறுதலும் (யாத் 33:14), யுத்தங்களில் ஜெயமும் (உபா. 1:30; 20:4) அவர்களுக்கு வாக்குப்பண்ணப்பட்டது. தேவன் அவர்களுக்கு முன்செல்லும்போது, அவர் ராஜாவாக, கர்த்தராக அவர்களுக்கு முன்னணியில் நடந்து போகும்போது, கோணலானவைகள் செவ்வையாக்கப்படும் என்றும், தடைகள் நீங்கிப்போகும் என்றும் அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர் (ஏசாயா 45:2; மீகா 2:13). அவ்விதமிருக்க, புதிய ஏற்பாட்டுக் காலத்தில் ஜீவிக்கும் தேவஜனங்களாகிய நாம், தேவன் தங்கியிருக்கும் அவரது வாசஸ்தலமாகவே மாற்றப்பட்டிருப்பதால், தேவனுடைய வாசஸ்தலமாக நாம் நம்மைக் காத்துக்கொள்வோமாகில், இவ்வாக்குத்தத்தங்களை நாம் சொந்தமாக்கிக்கொள்வது எவ்வளவு அதிக நிச்சயம்!
மேலும் இஸ்ரவேலருக்கு முன்செல்வதாக வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் அவர்களுக்கு வாக்குப்பண்ணின தேவன், தாம் சொன்ன வாக்குப்படியே, அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன்சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை (யாத் 13:21, 22). கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக்காட்டும்படிக்கு அவர்களுக்கு முன்சென்றது (எண். 10:33). ஞானக் கன்மலையாகிய கிறிஸ்து அதரிசனமானவராக அவர்களோடே கூடச் சென்றாரே (1 கொரி 10:4). அவர்களுடன் இருந்த தேவசமுகம் அவர்களுக்கு இவ்வித ஆசீர்வாதங்களை அருளிச்செய்திருக்குமானால், தேவனுடைய வாசஸ்தலமாகவே இருக்கும் நாம் எவ்வளவதிகமாய் இந்நன்மைகளை அனுபவிக்கிறவர்களாயிருப்போம்!
எனவே நாம் தேவாதிதேவனுடைய வாசஸ்தலமாக, அவர் நமக்குள் வாசம்பண்ணும் மேன்மையான அனுபவத்தை எப்போதும் காத்துக்கொள்ளும்படி நம்மிடத்தில் அவர் எதிர்பார்க்கும் நற்பண்புகள் சிலவற்றை வேதவசனங்களின் அடிப்படையில்
ஆராய்வோமாக.
ஆராய்வோமாக.
நம்முடைய தேவன் உன்னதத்தில் வாசம்பண்ணுகிறார் (ஏசாயா 57:15). பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் தேவன் நம்மை உன்னதங்களில் அவரோடே கூட உட்காரச் செய்திருக்கிறார் (எபே. 2:6). உன்னதத்தில் வாசம்பண்ணும் தேவன் நமக்குள் வாசம்பண்ணும்படியாக, நாம் பரிசுத்த ஆவியின் நிறைவை எப்போதும் காத்துக்கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தும் காரியங்களுக்கு நம்மை நாம் விலக்கிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் (எபே. 4:30, 31). நாம் ஆவியை அவித்துப்போடாமல், ஆவியில் அனலாயிருந்து - அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருந்து - கர்த்தருக்கு ஊழியஞ்செய்ய வேண்டும். நாம் பரிசுத்த ஆவியானவருக்கு எதிர்த்து நிற்காமல், அவரது மெல்லிய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ள வேண்டும்.
மேலும் தேவன் நம்மை வைத்திருக்கும் உன்னதங்களில் நாம் நிலைத்திருந்து, தேவனுடைய வலதுபாரிசத்திலுள்ள மேலானவைகளையே தேட வேண்டும். "பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்" (கொலோ. 3:2) என்று எழுதப்பட்டுள்ளதே! நாம் இவ்வுலகில் இருந்தாலும் உலகத்தாரல்லாதவர்களாய் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். "நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்" (பிலி 3:20) என்பது நம் அறிக்கையாயிருக்க வேண்டும். அப்படியானால் நினையாத நேரத்தில் ஆண்டவராகிய இயேசு மத்திய ஆகாயத்தில் வெளிப்படும்போது, "அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்" (வச. 21).
மேலும் தேவன் நம்மை வைத்திருக்கும் உன்னதங்களில் நாம் நிலைத்திருந்து, தேவனுடைய வலதுபாரிசத்திலுள்ள மேலானவைகளையே தேட வேண்டும். "பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்" (கொலோ. 3:2) என்று எழுதப்பட்டுள்ளதே! நாம் இவ்வுலகில் இருந்தாலும் உலகத்தாரல்லாதவர்களாய் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். "நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்" (பிலி 3:20) என்பது நம் அறிக்கையாயிருக்க வேண்டும். அப்படியானால் நினையாத நேரத்தில் ஆண்டவராகிய இயேசு மத்திய ஆகாயத்தில் வெளிப்படும்போது, "அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்" (வச. 21).
மேலும் நம்முடைய தேவன் பரிசுத்த ஸ்தலத்தில் வாசம்பண்ணுகிறார் (ஏசாயா 57:15). தேவபிள்ளையே, இப்புதிய வருடத்தில் கடந்த நாட்களைப் பார்க்கிலும் அதிகமாய் நீ உன் ஜீவியத்தின் பரிசுத்தத்திற்கு முக்கியத்துவம் அளிப்பாயாக! பரிசுத்த பர்வதமாகிய சீயோனில் வாசம்பண்ணுகிறவர் உன்னில் வாசம் செய்யும்படியாக, நீ ஒவ்வொரு நாளும் தேவசமூகத்தில் தரித்திருந்து கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தினாலும், தேவனுடைய வசனத்தினாலும், பரிசுத்த ஆவியினாலும் பரிசுத்தமாக்கப்படுவதற்கு உன்னை ஒப்புக்கொடுப்பாயாக. ஆண்டவராகிய இயேசு வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையுடன், நீ உன்னை அனுதினமும் அவருடன் ஒப்பிட்டுப்பார்த்து, அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல உன்னைச் சுத்திகரித்துக்கொள்வாயாக (1 யோவான் 3:2, 3). அப்போது பரிசுத்தமானது ஒரு பர்வதம் போல உன்னில் மேலோங்கியிருக்கும்; நீ அவருக்குப் பரிசுத்த ஸ்தானமாயிருப்பாய்! (சங். 114:2).
அன்றியும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நொறுங்குண்டு, பணிந்த ஆவியுள்ளவர்களிடத்தில் வாசம்பண்ணுகிறார் (ஏசாயா 57:15). தேவபிள்ளையே! உன் ஆவிக்குரிய ஜீவியத்தின் ஆரம்ப நாட்களில் உனக்கிருந்த நொறுங்குண்ட இருதயம் இப்போது உன்னில் உண்டா? ஜீவியத்தில் வருகிற சிறு சிறு பிழைகளுக்காகவும் தேவசமூகத்தில் நொறுங்குண்ட ஆவியுடன் கண்ணீர் சிந்தும் அந்த அனுபவம் இப்போது எங்கே? அதை நீ இழந்திருந்தால், கல்வாரிச் சிலுவையில் ஆண்டவராகிய இயேசு உனக்காகப் பட்ட பாடுகளை நீ ஒருமுறை கூடத் தியானிப்பாயாக! அவரது கல்வாரிப் பாடுகளையும், கடந்த காலங்களில் உன் ஜீவியத்தில் வந்த குற்றங்களை அவர் உனக்குத் தயவாய் மன்னித்து, உன்னை இம்மட்டும் இந்த ஆவிக்குரிய பாதையில் நிலைநிறுத்தியிருப்பதையும், அவர் உன் வாழ்வில் செய்திருக்கிற சகல நன்மைகளையும் சிந்திக்கும்போது உன் இருதயம் நொறுங்காதிருக்கக் கூடுமோ?
உன்னுடைய சகல மேன்மைபாராட்டல்களையும் விட்டு, உன்னைத் தாழ்த்தி வெறுமையாக்கி, அவருக்கு முன்பாக நீ உன்னைப் பணிந்த ஆவியுள்ளவனாகக் காத்துக்கொள்வாயாக. அப்படியானால் அவர் உனக்குள் வாசம்பண்ணுவார்; உன்னுடைய நொறுங்கிய இருதயத்தையும் பணிந்த ஆவியையும் அவர் உயிர்ப்பிப்பார். "உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்" என்று மீகா 6:8-இல் கூறப்பட்டிருப்பது, 'உன் தேவனோடு நடக்கும்படி உன்னை நீயே தாழ்த்துவதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்' என்று மூல பாஷையில் கூறப்பட்டுள்ளது. தேவனுக்கு முன்பாக நொறுங்குண்டவனாய் நீ இருப்பாயாகில், பணிந்த ஆவியுள்ளவனாய் நீ இருப்பாயாகில், "இந்தப் பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்" (மத் 18:4) என்று கூறப்பட்டிருப்பது போல, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தைப் புறக்கணியாதவரும், பணிந்த ஆவியுள்ளவர்களை உயர்த்துகிறவருமான தேவன் உன்னைப் பரலோகராஜ்யத்தில் பெரியவனாக்குவார்.
"அவருடைய தாபரஸ்தலம் மகிமையாயிருக்கும்" (ஏசாயா 11:10) என்று நாம் வாசிக்கிறோம். நாம் ஒரு காலத்தில் பாவிகளாக, அந்தகாரத்தில் இருந்தோம். எனினும் கர்த்தர் நம்மை இரட்சித்து, அபிஷேகித்து, ஒளியிலுள்ள பரிசுத்தவான்களின் சுதந்தரத்தில் பங்கடையச் செய்திருக்கிறார். அந்த ஐக்கியத்தில் நாம் முடிவுபரியந்தம் நிலைத்திருக்க வேண்டும். அந்தகாரத்திலிருந்த நம்மைத் தேவன் தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார். "முற்காலத்தல் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்" (எபே. 5:8) என்று கூறப்பட்டிருப்பது போல, கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு நாம் உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ள வேண்டும் (வச. 11).
மேலும், நம்முடைய எத்தனையோ பாவங்களையும் மீறுதல்களையும் தேவன் நமக்கு மன்னித்தது போல, நாமும் மற்றவர்கள் நமக்கு விரோதமாய்ச் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் அவர்களுக்கு மன்னிப்போமாயின், நாம் மகிமையுள்ளவர்களாய் இருப்போம். "குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை" (நீதி 19:11) என்று கூறப்பட்டுள்ளதே! அன்றியும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவர் மகிமையின் ஆவியாயிருக்கிறார் (1 பேதுரு 4:14). நம்மில் தங்கியிருக்கும் அந்த மகிமையின் ஆவியானவர் தமது மறுரூபமாக்கும் கிரியையை நம்மில் நடப்பிக்கும்படியாக நாம் அவருக்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். அப்போது, "நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத் தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்" (2 கொரி 3:18) என்று கூறப்பட்டிருப்பது நம் அனுபவமாயிருக்கும்.
"காரிருளிலே வாசம்பண்ணுவேன்" (2 நாளா 6:1) என்று நம் தேவனாகிய கர்த்தர் கூறியிருக்கிறார். தேவபிள்ளையே! ஒருவேளை முற்றிலும் இருளான பாதையில் நீ கடந்துபோய்க் கொண்டிருக்கலாம் அல்லது இனி கடந்துபோக வேண்டியது வரலாம். காரிருளில் வாசம்பண்ணுகிறவர் ஒளியை வஸ்திரமாகத் தரித்திருப்பதால், அந்தக் காரிருள் அவருக்குக் காரிருளாக இருப்பதில்லை. காரிருளில் வாசம்பண்ணுகிறவர் உனக்குள் இருப்பதால், நீயும் அந்தகாரமான பாதைகளில் கடந்துபோகும்போது, 'கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்' என்று விசுவாசத்துடன் அறிக்கை செய்வாயாக. "உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்" (ஏசாயா 50:10) என்று கூறப்பட்டிருப்பது போல கர்த்தருடைய நாமத்தை மாத்திரம் நம்பி, உன் தேவனையே நீ சார்ந்துகொள்வாயாக.
"இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும். உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப் போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி" (சங். 139:11, 12) என்றும், "பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது" (சங். 74:16) என்றும் சங்கீதக்காரன் தேவனை நோக்கிக் கூறுகிறான். அவருக்கு இருளும் பகலைப் போல வெளிச்சமாயிருக்கிறது; இருளும் வெளிச்சமும் அவருக்கு ஒன்றுபோல் இருக்கின்றன. எனவே காரிருளில் வாசம்பண்ணுகிறவர் அருளும் வெளிச்சத்தினால் நீ இருளைக் கடந்துபோவாய்; இருளான பாதைகளிலும் அவரது தீபம் உன் தலையின் மேல் பிரகாசித்துக்கொண்டிருக்கும். ஆம்! கர்த்தருடைய வசனம் உன் கால்களுக்குத் தீபமும் உன் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கும் (சங். 119:105). தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின் ஒளி உன்னைச் செம்மையான வழியிலே நடத்தும் (2 கொரி. 4:4-6). "எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார், அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்" (ஏசாயா 60:1-3) என்ற வாக்குத்தத்தம் உனக்குச் சொந்தமாகும்.
"இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்" (சங் 22:3) என்று நாம் வாசிக்கிறோம். தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலின் துதிகளின் மத்தியில் வாசம்பண்ணுகிறார். பாவமன்னிப்பாகிய இரட்சிப்பின் அனுபவம் பெற்று மாம்சத்தின் மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனை செய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே ஆவிக்குரிய பிரகாரமாக விருத்தசேதனம் பெற்ற மெய்யான இஸ்ரவேலராயிருக்கிறோம் (ரோமர் 2:28, 29; பிலி 3:3). நாம் சுத்த இருதயமுள்ள இஸ்ரவேலராய், செம்மையான இருதயமுள்ளவர்களாய் நம்மைக் காத்துக்கொண்டு, தேவன் பிரியப்படுகிற துதிகளை அவருக்கு ஏறெடுக்கும்போது இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசம் செய்கிற தேவனாகிய கர்த்தர் நம்மில் வாசம் செய்வார்.
"கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்" (சங். 34:1) என்று சங்கீதக்காரன் கூறுகிறான். கர்த்தரிடத்திலிருந்து ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் பெற்றுக்கொள்ளும்போது மட்டுமல்ல, அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் அவரிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறதென்று நாம் அறிந்திருப்பதால், இப்புத்தாண்டில் எப்போதும் எல்லாவற்றிற்காகவும் கர்த்தரைத் துதிக்கத் தீர்மானிப்போமாக. சாலொமோன் கட்டிய தேவாலயத்தில் ஆசாரியர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏக சத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடியபோது கர்த்தருடைய மகிமை அந்த ஆலயத்தை நிரப்பியது போல, நாம் எப்போதும் அவரைத் துதித்து ஸ்தோத்திரிப்பவர்களாயிருந்தால், அவருடைய வாசஸ்தலமாகிய நாமும் தேவமகிமையினால் நிரப்பப்பட்டிருப்போம்!
மேலும் தேவனாகிய கர்த்தர், "என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்" (ஏசாயா 56:7) என்று கூறுகிறார். கடைசி நாட்களில் வந்திருக்கிற நாம், ஜெபவீடாக நம்மைக் காத்துக்கொள்ள ஜாக்கிரதையாயிருப்போமாக. வாழ்க்கையின் பலவிதமான பிரச்சினைகள், மிதமிஞ்சிய அலுவல்கள், சரீர பலவீனங்கள் இவற்றின் மத்தியிலும் இவ்வருடத்தில் நாம் நம்முடைய ஜெபஜீவியத்தைக் கட்டியெழுப்பிக்கொள்ளக் கவனமாயிருப்போமாக. யாக்கோபு தனக்குண்டாயிருந்த யாவற்றையும் அக்கரைப்படுத்தித் தேவசமூகத்தில் பிந்தித் தனித்திருந்து ஜெபத்தில் போராடியது போல, ஜெபத்தில் போராட நாம் நேரம் எடுத்துக்கொள்வோமாக. இதனையே அறைவீட்டுக்குள் பிரவேசித்து, கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற பிதாவை நோக்கி ஜெபம்பண்ணுதல் என்று கர்த்தராகிய இயேசு குறிப்பிடுகிறார் (மத் 6:6). இவ்விதம் தனி ஜெபம் நம்மில் இருக்குமாயின், நமக்குள்ளே வாசம்பண்ணுகிற நம் தேவன்தாமே நாம் சந்திக்க வேண்டிய பிரச்சினைகளை எதிர்கொண்டு நமக்கு ஜெயத்தைக் கட்டளையிடுவார்.
நாம் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் குறித்து நம் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துவோமாயின், எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் நம் இருதயங்களையும் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள் காத்துக்கொள்ளும் (பிலி 4:6, 7). ஆண்டவராகிய இயேசு ஜெபம் பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறி ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கையில், அவருடைய முக ரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது (லூக்கா 9:28, 29) என்று நாம் வாசிக்கிறோமே! இது ஜெபஜீவியத்தின் மூலம் நம் உள்ளான மனுஷனில் நடப்பிக்கப்படும் மறுரூபமாகுதலின் செயலுக்கு ஒப்புமையாக இருக்கிறதன்றோ! ஆகவே தனிமையாய், குடும்பமாய், சபையாய்த் தேவசமூகத்திலிருந்து ஜெபிக்கும்படியாக நாம் தீர்மானிப்போமாக! "எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்" (1 பேதுரு 4:7) என்று அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுகிறார். கர்த்தராகிய இயேசு கூறியிருக்கிறபடி, அவரது இரகசிய வருகையில் அவருக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு நாம் எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருப்போமாக (லூக்கா 21:36).
அன்பான தேவபிள்ளையே! மேற்கூறப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் தேவனுடைய வாசஸ்தலமாக உன்னைக் காத்துக்கொள்ள நீ ஜாக்கிரதையாயிருப்பாயாக. உன்னதத்தில் வாசம்பண்ணுகிற கர்த்தர் உன்னில் வாசம் செய்வாராயின், "அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்" (யோபு 25:2) என்று கூறப்பட்டிருப்பது போல அவர் உனக்கு எல்லாச் சூழ்நிலைகளிலும் சமாதானத்தைக் கட்டளையிடுவார். தேவன் வாசம்பண்ணுகிற பரிசுத்த ஸ்தலமாக உன்னை நீ காத்துக்கொள்வாயாகில், தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்தில் வாசமாயிருக்கிற தேவன் உனக்குத் தகப்பனும் உன் நியாயத்தை விசாரிக்கிறவருமாயிருப்பார் (சங். 68:5). நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்தில் வாசம்பண்ணும் தேவனின் வாசஸ்தலமாய் நீ இருப்பாயாகில், நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குச் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிற தேவன் எல்லா நேரங்களிலும் உனக்குச் சமீபமாயிருப்பார்; அவர் உன்னை எல்லாத் தீங்குக்கும் நீங்கலாக்கி இரட்சிப்பார் (சங். 34:18).
அவருடைய மகிமை தங்கிய வாசஸ்தலமாக நீ உன்னைக் காத்துக்கொண்டால், "மகிமையானவைகளின் மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்" (ஏசாயா 4:5) என்று கூறப்பட்டிருப்பது போன்று உன் மேல் அவரது காவல் எப்போதும் உண்டாயிருக்கும். காரிருளில் வாசம்பண்ணுகிற தேவன் உன் வாழ்க்கையில் சிற்சில வேளைகளில் இருளைக் கட்டளையிட்டாலும், அப்பாதைகளில் அவர் மேல் விசுவாசம் வைத்து நீ முன்செல்வதால், அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும் ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் அங்கே நீ கண்டடைவாய் (ஏசாயா 45:3). இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசம்பண்ணுகிறவரை நீ துதித்து ஸ்தோத்திரிக்கும்போது, அவர் உன் யுத்தங்களையெல்லாம் உனக்காக நடப்பித்து உனக்கு மகத்தான ஜெயத்தைக் கட்டளையிடுவார் (2 நாளா 20:22). அவருடைய ஜெபவீடாக நீ உன்னைக் காத்துக்கொள்வாயாகில், அவருடைய ஜெபவீட்டிலே அவர் உன்னை மகிழ்ந்திருக்கச் செய்து, உன்னுடைய உள்ளான மனிதனிலே ஒரு மறுரூபமாகுதலின் கிரியையை அவர் தொடர்ந்து நடப்பிப்பார்.
இவ்விதம் நாம் அவருடைய வாசஸ்தலமாய் இருப்போமாயின் - நமக்குள்ளே வாசம்பண்ணுகிற தேவன் நமக்குள்ளே உலாவி, நம்முடைய தேவனாயிருப்பார்; நாம் அவருடைய ஜனங்களாயிருப்போம் (2 கொரி 6:16). "உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை. நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்" (லேவி 26:11, 12) என்றும் அவர் வாக்குரைத்திருக்கிறாரே!
இவ்விதம் நாம் அவருடைய வாசஸ்தலமாய் இருப்போமாயின் - நமக்குள்ளே வாசம்பண்ணுகிற தேவன் நமக்குள்ளே உலாவி, நம்முடைய தேவனாயிருப்பார்; நாம் அவருடைய ஜனங்களாயிருப்போம் (2 கொரி 6:16). "உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை. நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்" (லேவி 26:11, 12) என்றும் அவர் வாக்குரைத்திருக்கிறாரே!
நாம் இவ்வுலகில் தேவனுடைய வாசஸ்தலமாக நம்மைக் காத்துக்கொள்வோமாயின், நித்திய வாசஸ்தலங்கள் ஸ்தாபிக்கப்பட்டு, நம்முடைய நித்திய வாசஸ்தலமாகிய சீயோனை, புதிய எருசலேமை நாம் சுதந்தரித்துக்கொள்ளும்போது பரலோகத்திலிருந்து உண்டாகிற பெருஞ்சத்தத்தை நாம் கேட்போம்.
அது, "இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின ... இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்" (வெளி 21:3-5) என்பதே!
பிரியமானவர்களே இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
0 Comments