பிசாசுக்கு இடங்கொடாமல் இருங்கள் .


​உன்னதமானவரின் மறைவில், சர்வவல்லவரின் நிழலில், அவரது செட்டைகளின் கீழே, அவருடைய சிறகுகளுக்குள்ளே தங்கியிருக்கும் தேவபிள்ளைகளுக்கு எப்போதும் தேவனுடைய பலத்த பாதுகாப்பு உண்டு. "சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்" என்பது அவர்களுக்குரிய வாக்குத்தத்தமாகும் (சங். 91:1-4, 13).

​"நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன்" (சக. 2:5) என்றுரைத்திருக்கிற தேவன்தாமே அக்கினிமதிலாக அவர்களைச் சூழ்ந்திருப்பதால், அவர்களைச் சேதப்படுத்தச் சாத்தானால் இயலாது.

​எனவே, இத்தகைய பலத்த பாதுகாவலுக்குள் இருக்கும் தேவஜனங்களைச் சேதப்படுத்தும்படி தனக்கு ஏதேனும் வழி அகப்படுமா என்று அவன் தேடிச் சுற்றித் திரிகிறான் (I பேதுரு 5:8). இதினிமித்தமாகவே, 'பிசாசுக்கு இடங்கொடாமல் இருங்கள்' (எபே. 4:27) என்று திருவசனம் நம்மை எச்சரிக்கிறது. நாம் முறுமுறுக்கும்போதும், கர்த்தரைப் பரீட்சைபார்க்கும்போதும், அவரது பிரமாணங்களை மீறும்போதும் பழைய பாம்பாகிய சாத்தான் நம்மைச் சேதப்படுத்தும்படி எவ்விதம் அவனுக்கு நாம் இடமளித்துவிடுகிறோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

​ஆவிக்குரிய பிரகாரமாக நம்மை மல்லாந்து விழப்பண்ணுவதற்கும் மோசம் போக்குவதற்கும் அவன் மேலும் பல்வேறு வகைகளைத் தேடிச் காத்திருக்கிறான். ஆதலால் நம்முடைய ஜீவியத்தில் அவனுக்கு நாம் இடமளித்து விடாதவாறு எச்சரிக்கையாயிருக்க வேண்டிய சில அம்சங்களை இன்று நாம் காண்போம்.

1. மல்லாந்து விழப்பண்ணும் சர்ப்பம்

ஆதியாகமம் 49:17-இல் குதிரையின் மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு 'வழியில் கிடக்கிற சர்ப்பம்' என்றும், 'பாதையில் இருக்கிற விரியன்' என்றும் நாம் வாசிக்கிறோம். இந்தச் சர்ப்பம், குதிரையின் மேல் ஏறியிருக்கிறவனை மல்லாந்து விழப்பண்ணுவதற்காகவே அவனுடைய வழியில் கிடக்கிறது!

​ஆகவே 'குதிரையின் மேல் ஏறியிருத்தல்' என்பது, பிசாசானவன் ஆவிக்குரிய பிரகாரமாக நம்மை மல்லாந்து விழப்பண்ணத்தக்கதாக நம் ஜீவியத்தில் நாம் இடமளிக்கக்கூடிய அம்சங்களைக் குறிக்கிறது. அவற்றுள் சில:
​அ) மனமேட்டிமையாயிருத்தல்

​குதிரை, செருக்கும் கர்வமும் உள்ள ஒரு மிருகமாகும் (யோபு 39:20, 24). எனவே 'குதிரையின் மேல் ஏறியிருத்தல்' என்பது, நாம் செருக்கும் கர்வமும் உள்ளவர்களாய் இருப்பதைக் குறிக்கிறது. "தன் உள்ளங்காலைத் தரையின் மேல் வைக்க அஞ்சின செருக்கும் சுகசெல்வமுமுள்ள ஸ்திரீ" (உபா. 28:56) என்றும் நாம் வாசிக்கிறோமே!

​நாம் கர்த்தருடைய வழியில் 'நடப்பதற்கு' நமக்கு மனத்தாழ்மை மிகவும் அவசியமாயிருக்கிறது. கர்த்தருடைய வழிநடத்துதலுக்குக் காத்திராமல், மனமேட்டிமையுள்ளவர்களாகத் தங்கள் சுயவழியில் செல்லுகிறவர்களை மல்லாந்து விழப்பண்ணும்படியாக, வலுசர்ப்பம் அவர்களது வழியில் கிடக்கிறது. மாறாக, மனத்தாழ்மையுள்ளவர்களாகக் கர்த்தருடைய பரிசுத்த வழியில் நடந்து செல்லுகிறவர்களின் வாழ்க்கைப் பயணமோ பாதுகாப்பானதாயிருக்கும்.

​'மெய்யான மனத்தாழ்மையுள்ளவன் பிசாசினால் நெருங்க முடியாததோர் இடத்தில் இருக்கிறான்' என ஒரு தேவமனிதன் கூறுகிறார். வெகு மனத்தாழ்மையோடு கர்த்தருடைய வழியில் நடக்கிறவராக, அவரைச் சேவித்துவந்த அப். பவுல் ஒரு சந்தர்ப்பத்தில் மெலித்தா தீவில் இருந்தபோது, அவரது கையை ஒரு விரியன் பாம்பு கவ்விக் கொண்டது. ஆயினும் அந்த விஷப் பாம்பு அவரை எவ்விதத்திலும் சேதப்படுத்த முடியவில்லையே! (அப் 20:19, 28:3-6).
மனத்தாழ்மையுள்ளவர்களாகக் கர்த்தருடைய வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும், அவர்கள் திசைகெட்டுப்போவதில்லை; அவர்கள் மனுஷருடைய பார்வையில் 'மதியீனரைப்' (fools) போல் காணப்பட்டாலும், அவர்கள் தவறுவதில்லை! (ஏசாயா 35:8). நாம் பின்பற்றும்படி நமதாண்டவர் வைத்துச் சென்றிருக்கிற வழி, 'தாழ்மையின் வழியே' ஆகும்.

​அவரது அடிச்சுவடுகளில் நடந்துசெல்ல மனமின்றி, ஒரு நபர் தன்னைத்தான் உயர்த்துகிறவனாகிய அந்திக்கிறிஸ்துவினுடைய வழியை, மனமேட்டிமையின் வழியைத் தெரிந்துகொள்ளுவானாயின், அவ்வழியில் வருகிறவர்களை விழப்பண்ணும்படி காத்துக்கிடக்கும் 'விரியன்' அவனை வீழ்த்திவிடும்! பெருமையுள்ளவர்களுக்குத் தேவன்தாமே எதிர்த்துநிற்பதால், அவர்களை எடுத்து நிறுத்துவதற்கும் எவரும் இருக்கமாட்டார்கள். 'மிகுந்த பெருமையுள்ளவன் இடறி விழுவான்; அவனை எடுத்து நிறுத்துவாரில்லை' (எரே. 50:32) என்றும், "அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை" (நீதி 16:18) என்றும் எழுதப்பட்டுள்ளதன்றோ!

​எதிர்த்து நிற்பதும், தேவனால் நடத்தப்படுவதை விரும்பாமல் சுயவழிகளில் செல்லுவதும், தற்புகழை நாடுவதும் அந்திக்கிறிஸ்துவின் தன்மைகளாகும் (II தெச. 2:4). நாமோ, சாந்தமும் மனத்தாழ்மையுள்ளவராயிருக்கிற நமதாண்டவரையே பின்பற்றும்படி ஜாக்கிரதையாய் இருப்போமாக (மத். 11:29). அவ்வாறாயின் நாம் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை!

2. வாசற்படியில் படுத்திருக்கும் பாவம்

​மனமேட்டிமையுள்ளவர்களை மல்லாந்து விழப்பண்ணும்படி 'வழியில் கிடக்கிற சர்ப்பத்தை', ஆதியாகமம் 4:7-இல் குறிப்பிடப்பட்டுள்ள 'வாசற்படியில் படுத்திருக்கும் பாவத்திற்கு' நாம் ஒப்பிடலாம். தேவனாகிய கர்த்தர் காயீனை நோக்கி, "நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்" என்று கூறினார்.

​'வாசற்படியில் படுத்திருக்கும் பாவம்' என்பது, நம்மை எளிதில் விழத்தள்ளும்படி நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவங்களைக் குறிக்கிறது (எபி. 12:1). காயீன், ஆபேல் ஆகிய இருவரில் மூத்தவனாகிய காயீன்தான் முதலாவதாகக் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தினான். அவன் நிலத்தைப் பயிரிடுகிறவனாயிருந்து, நிலத்தின் கனிகளில் சிலவற்றை கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தான். ஆடுகளை மேய்க்கிறவனாயிருந்த ஆபேல் அதன் பின்னரே தன் மந்தையிலிருந்து முதல்தரமானவைகளை அவருக்குக் காணிக்கையாகச் செலுத்தினான்.

​ஆனால் பிந்திச் செலுத்தப்பட்ட இளையவனின் காணிக்கை அவரால் அங்கீகரிக்கப்பட்டது. முந்திச் செலுத்தப்பட்ட மூத்தவனின் காணிக்கையோ அவரால் அங்கீகரிக்கப்படவில்லை. இதன் காரணம் யாது? 'ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார்; காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கீகரிக்கவில்லை' (ஆதி. 4:4, 5) என்று திருவசனம் கூறுகிறது.

​ஆபேலின் ஜீவியம் (சுபாவம்) அவரால் அங்கீகரிக்கப்பட்டதினால் அவனது காணிக்கையும் அவரால் அங்கீகரிக்கப்பட்டது என்பதும், காயீனின் ஜீவியம் (சுபாவம்) அவரால் அங்கீகரிக்கப்படாததினால் அவனது காணிக்கையும் அவரால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதுமே இதன் பொருளாகும். தேவன் எதிர்பார்த்த 'நன்மை' காயீனின் ஜீவியத்தில் இல்லாதபடியினால், அவன் செலுத்திய காணிக்கையை அவர் அங்கீகரிக்கவில்லை.
​காயீனிடத்தில் தேவன் எதிர்பார்த்த 'நன்மை' யாது?

​மீகா 6-ஆம் அதிகாரத்தில், தேவன் மனுஷனில் எதிர்பார்க்கிற 'நன்மை' யாது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. "என்னத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாக பணிந்துகொள்வேன்? தகனபலிகளைக்கொண்டும், ஒரு வயது கன்றுக்குட்டிகளைக்கொண்டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ? ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ?" (வச. 6, 7).

​இதற்கான ஒரே பதில்: "மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ் செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்" (வச. 8).

​'மனுஷனே! நியாயம், இரக்கம், தாழ்மை போன்ற திவ்ய சுபாவங்களை வெளிப்படுத்துதலாகிய 'நன்மையைத் தவிர வேறெதையும் கர்த்தர் உன்னிடத்தில் எதிர்பார்க்கவில்லை!' என்று இவ்வேதபகுதி தெளிவாகக் கூறுகிறது.

​தான் செய்யும்படி தேவன் எதிர்பார்த்த 'நன்மை' இன்னதென்று காயீன் அறிந்திருக்கக்கூடுமோ என்ற கேள்வி நம்மில் எழக்கூடும். "மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்" என்று மேற்காணும் வேதபகுதி கூறுகிறது. இவ்வேதபகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள 'மனுஷனே' என்ற பதம், தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட 'முதல் மனிதன்' முதற்கொண்டுள்ள எல்லா மனிதருக்கும் பொருந்தும். தேவன் தாம் வெளிப்படுத்தாத ஒன்றினை மனிதன் கைக்கொள்ளும்படி எதிர்பார்ப்பாராயின், அவருடைய பகுதியில் அது அநீதியாயிருக்குமே!

​'வெளிப்படுத்தப்பட்டவைகள் அவைகளின்படியெல்லாம் செய்யும்படி நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவை' (உபா. 29:29) என மோசே கூறுகிறாரன்றோ! தினந்தோறும் பகலின் குளிர்ச்சியான வேளையில் தோட்டத்திற்கு வந்து, தம்முடைய பிள்ளைகளாகிய ஆதாமோடும் ஏவாளோடும் சஞ்சரித்துக்கொண்டிருந்த தேவன், திவ்ய சுபாவங்களில் வளருதலாகிய இந்த 'நன்மை செய்தலைக்' குறித்து அவர்களுக்குப் போதித்திருப்பார் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் தேவனுடைய சாயலின்படி சிருஷ்டிக்கப்பட்டிருந்த அவர்கள், அந்தச் சாயலில் வளர்ந்து பூரணமாக்கப்பட வேண்டும் என்பதே தேவநோக்கமாயிருந்தது.

​'கீழ்ப்படிதல்' என்பது, தேவன் அவர்களிடத்தில் எதிர்பார்த்த நன்மையாகிய திவ்ய சுபாவங்களுள் ஒன்றாகும். ஆனால் அவர்களோ அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமற்போகவே, பாவம் மரணத்துக்கேதுவாக அவர்களை ஆண்டுகொண்டது (ரோமர் 5:21). அவர்களுடைய பிள்ளைகளாகிய காயீனும் ஆபேலும் இவைகளையெல்லாம் தங்கள் பெற்றோரின் மூலமாக அறிந்திருந்தனர்.

​ஆயினும் மூத்தவனாகிய காயீன், தான் திவ்ய சுபாவங்களில் வளர வேண்டும் என்பதைக்குறித்து அக்கறைகொள்ளவில்லை; ஆபேலைக் கொலைசெய்யும் முன்னதாகவே அவனுடைய கிரியைகள் பொல்லாதவையாயிருந்தன என்று திருவசனம் கூறுகிறது (I யோவான் 3:12) பெருமை, பொறாமை, பகை, எரிச்சல் போன்றவை அவனில் குடிகொண்டிருந்தன. ஆகையினாலேயே உள்ளிந்திரியங்களை ஆராய்ந்தறிகிற தேவன் அவனது காணிக்கையை அங்கீகரிக்கவில்லை! (எரே. 17:10).

​தேவபிள்ளையே, நீ கர்த்தருக்காகப் பல நற்கிரியைகளைச் செய்யக்கூடும். ஆனால் நீ மெய்யான மனத்தாழ்மையின்றி, மனமேட்டிமையோடு அவற்றைச் செய்வாயாகில், அவை அவருக்கு அருவருப்பானவையாக இருக்கும். 'துன்மார்க்கனுடைய பலியோ கர்த்தருக்கு அருவருப்பானது' (நீதி. 15:8) என்று நாம் வாசிக்கிறோமே!

​"பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன், தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்"; "பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்"; "மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்" (சங். 51:16,17; I சாமு. 15:22; பிர. 5:1).

​இவைகள் அனைத்தும் 'திவ்ய சுபாவங்களையே' தேவன் நம்மில் எதிர்பார்க்கிறார் என்பதை வலியுறுத்துகின்றன. இந்தத் திவ்ய சுபாவங்கள் அனைத்திற்கும் அடிப்படையானது மனத்தாழ்மையே! கர்த்தருக்குப் பிரியமான பலியும் அதுவே! 'நீ மனத்தாழ்மையுள்ளவனாயிராவிடில், பாவம் உன்னை மேற்கொள்ளும்' என்பதையே கர்த்தர் காயீனுக்கு உணர்த்த விரும்பினார்.

​அவனோ அவருக்குச் செவிகொடாமற்போனான்; ஆதலால் பாவம் அவனை மேற்கொண்டது; அவன் தன் சகோதரனைக் கொலைசெய்து, மனுஷகொலை பாதகனானான்! "தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்" (I யோவான் 3:15) என்று திருவசனம் நம்மை எச்சரிக்கிறது. மனத்தாழ்மை இல்லாதவர்களைப் பாவம் மேற்கொள்ளும்! நம்மிலுள்ள பகையுணர்வானது, நம்மில் பெருமை குடிகொண்டுள்ளது என்பதற்கான தெளிவானதோர் அடையாளமாகும். அது நரக பாதாளத்திற்கே நம்மைக் கொண்டுசென்றுவிடும்! மேட்டிமையானவர்களை வரவேற்கும்படி பாதாளம் தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்திருக்கிறது! (ஏசாயா 5:14, 15, 21).

​நம் எதிராளியாகிய பிசாசானவன், இறுமாப்புள்ளவனாகி, அதினிமித்தம் ஆக்கினையை அடைந்தான்; நம்மையும் இறுமாப்படையச் செய்து, அதன் மூலம் ஆக்கினையில் விழப்பண்ணும்படி அவன் எத்தனிக்கிறான் (I தீமோ. 3:6). ஆகவே நாம் அவனுக்கு இடங்கொடாமல், தேவகிருபையில் நாளுக்கு நாள் வளரும்படி, மென்மேலும் நம்மைத் தாழ்த்துவோமாக.

​கடந்த காலத்தில் நாம் அடைந்திருக்கிற ஆவிக்குரிய அனுபவங்களில் நாம் பெருமை பாராட்டாதிருப்போமாக! நம்முடைய நீதிகளெல்லாம் தேவனுடைய பார்வையில் அழுக்கான கந்தை போல் இருக்கிறதே! (ஏசாயா 64:6). நம்மை நாமே தாழ்த்துதலாகிய 'நன்மைக்கு' நாம் ஞானிகளும், நம்மை நாமே உயர்த்துதலாகிய 'தீமைக்குப்' பேதைகளுமாயிருப்போமாயின், நாம் அவரது பரிசுத்த வழியில் நடந்து செல்லுகிறவர்களாயிருப்போம்.

​அவ்வாறுாயின், சமாதானத்தின் தேவன்தாமே சீக்கிரமாய் சாத்தானை நம்முடைய கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்; சத்துருவின் வல்லமைகளை நாம் மிதிப்போம்; அவை நம்முடைய உள்ளங்கால்களின் கீழே சாம்பலாயிருக்கும்! (ரோமர் 16:19, 20; மல்கி. 4:3). மனத்தாழ்மையே ஜெயத்தின் இரகசியமாகும்.
​3. சுயபெலனைச் சார்ந்திருத்தல்

​"எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான். இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது" என்றும், "குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!" என்றும் திருவசனம் கூறுகிறது (சங். 33:16, 17; ஏசாயா 31:1).

​இவ்வேதபகுதியிலுள்ள 'தன் சேனையின் மிகுதி', 'தன் பெலத்தின் மிகுதி', 'தன் மிகுந்த வீரியம்', 'குதிரைவீரரின் மகா பெலம்' போன்றவை, நம் ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் ஜெயங்கொள்வதற்கு நமது சுய பெலனைச் சார்ந்துகொள்ளுதலையே குறிக்கின்றன. தன் சுயபெலத்தின் மேல் நம்பிக்கை வைத்து, 'என்னாலே கூடும்' என்று எண்ணுகிற யாதொருவருக்கும் ஜெயஜீவியம் ஒருக்காலும் சாத்தியமானதாயிராது. அப்படிப்பட்டவர்களை விழப்பண்ணுவதற்காகவே பழைய பாம்பாகிய வலுசர்ப்பம் அவர்களுடைய வழியில் காத்துக்கிடக்கிறது!

​"நாங்கள் எங்கள் பலத்தினாலே எங்களுக்குக் கொம்புகளை உண்டாக்கிக்கொள்ளவில்லையோ" என்று சொல்லி, வீண்காரியத்தில் மகிழுகிறவர்கள் ஒடுக்கப்படும்படி, தேவன் தாமே அவர்களைச் சத்துருக்களின் கையில் ஒப்புக்கொடுத்துவிடுகிறார்! (ஆமோஸ் 6:13, 14).

​தன் பெலத்தில் களிக்கிற குதிரையைப் போல (யோபு 39:21), அவர்கள் தங்கள் சுயபெலனில் மேன்மை பாராட்டுகிறவர்களாக, "என் கை என்னை ரட்சித்தது" என்று கர்த்தருக்கு விரோதமாக வீம்பு பேசுகிறவர்களாயிருப்பார்கள்; கர்த்தருடைய யுத்தங்களை நடப்பிக்கிறதற்கு அப்படிப்பட்டவர்கள் தகுதியானவர்கள் அல்ல! (நியா. 7:2).

​தேவபிள்ளையே, உன்னுடைய ஜீவியத்தில் உபவாசம், கண்விழிப்பு, பிரதிஷ்டை, தியாகம், தேவவைராக்கியம் போன்ற ஆவிக்குரிய அம்சங்களுங்கூட உன் சுய எழுச்சியினால் உண்டானவையாயிராமல், தேவகிருபையினால் உண்டானவையாக, பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலுக்கு உட்பட்டவையாக இருப்பதாக! நாளுக்கு நாள் நீ ஜெயத்தின் மேல் ஜெயம் பெற்று, பூரணத்தை நோக்கிக் கடந்துசெல்லுவதற்கு, தேவ கிருபையையே முற்றிலும் சார்ந்துகொள்வாயாக!

​'ஜெயஜீவியம்' என்பது, முற்றிலும் கிருபையினால் மாத்திரமே நாம் அடைந்துகொள்ளக்கூடிய ஒன்றாகும். 'என்னால் ஏதாகிலும் ஆகும் என்பது போல ஒன்றை யோசிக்கிறதற்கும் நான் என்னாலே தகுதியானவன் அல்ல; நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்' (II கொரி. 3:5; I கொரி. 15:10) என்ற அறிக்கையுடன் தேவனுடைய கிருபையைச் சார்ந்துகொள்ளுகிறவர்களே அதை அடைந்துகொள்ளுவர்.

​இவ்விதம் தங்கள் ஒன்றுமில்லாமையை உணருகிறவர்கள் எல்லாவற்றுக்காகவும் கர்த்தருடைய ஒத்தாசையை நாடி, அவருடைய சமுகத்தில் காத்திருந்து ஜெபிக்கிறவர்களாக இருப்பார்கள்; அவர்கள் தங்களுக்குக் கிடைக்கிற சிறிதும் பெரிதுமான ஒவ்வொரு ஜெயத்திற்காகவும் கர்த்தரையே உயர்த்தித் துதிக்கிறவர்களாக இருப்பார்கள்.

​தங்கள் சுயபெலனைச் சார்ந்திருக்கிறவர்களோ ஜெபம்பண்ணாமலும் கர்த்தரைத் துதியாமலுமிருந்து சடுதியாகத் தங்களுக்கு நேரிடும் சோதனைகளில் அகப்பட்டுத் தவிப்பார்கள் (மத். 26:41; பிர. 9:12). குதிரையின் பலத்தில் விருப்பமாயிராதவரும், வீரனுடைய கால்களில் பிரியப்படாதவருமாகிய கர்த்தர், தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் மேலேயே பிரியமாயிருக்கிறார் (சங். 147:10, 11).

​அருமையான தேவபிள்ளையே, நீ நிலைநிற்பது தேவனுடைய கிருபையினாலேயே என்பதை நீ உணருகிறாயா? (I பேதுரு 5:12). எந்தச் சூழ்நிலையினாலும் நீ அசைக்கப்பட்டுப்போகாமல், முடிவிலே அசைவில்லாத ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி, நீ உன் சுயபெலனைச் சாராமல், முடிவுபரியந்தம் கிருபையையே பற்றிக்கொள்ளுவாயாக! (எபி. 12:28); கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறவர்களைப் பாவம் மேற்கொள்ளமாட்டாது (ரோமர் 6:14).
​4. மாம்சத்தின் மேல் நம்பிக்கையாயிருத்தல்

​'சகாயமடையும்படி எகிப்துக்குப் போய் குதிரைகள் மேல் நம்பிக்கை வைத்து, அவைகளை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ! அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே' (ஏசாயா 31:1, 3) என்றும், 'மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்' (எரே. 17:5) என்றும் திருவசனம் கூறுகிறது.

​"எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது" (II கொரி. 10:4) என்று அப். பவுல் எழுதுகிறார். நம்முடைய ஜீவியமாகிய போர்க்களத்தில் நாம் பகை, கோபம், விரோதம், வைராக்கியம், பிரிவினை, சண்டை போன்ற மாம்சத்துக்கேற்ற போராயுதங்களைக் கையாளுவோமாயின், நாம் தோல்வியடைவோம்.

​மாறாக, அன்பு, நீடிய பொறுமை, சாந்தம், விசுவாசம் போன்ற ஆவிக்கேற்ற போராயுதங்களை நாம் கையாளுவோமாயின், மாபெரும் வெற்றியடைவோம். சத்தியம், நீதி, சமாதானம், விசுவாசம், கர்த்தருடைய வருகையின் நம்பிக்கை, தேவ வசனம், பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணுதல் போன்றவை நம் ஜெயத்திற்காக நாம் எப்போதும் தரித்திருக்கும்படி கர்த்தரால் நமக்கு நியமிக்கப்பட்டுள்ள சர்வாயுதவர்க்கமாகும் (எபே. 6:13-18). தேவபிள்ளையே, உன் ஜீவியத்தில் நீ பிரயோகிக்கும் போராயுதங்கள் எத்தகையவை என்பதை நீ நிதானித்தறிவாயாக!

​மாம்சமானதைத் தங்கள் புயபலமாகக் கொள்ளாமல், எல்லாவற்றுக்காகவும் கர்த்தரை மாத்திரமே சார்ந்திருக்கிறவர்களைச் சத்துருவினால் ஒருபோதும் மேற்கொள்ள இயலாது! கர்த்தரின் வலதுகரம் அவர்களுக்காகப் பராக்கிரமம் செய்யும் (சங். 118:6-15). மிகச் சிறந்த யுத்த வீரனாயிருந்த யோசுவா, தான் செய்த சகல யுத்தங்களிலும் தன் ஜெயத்திற்காகக் கர்த்தரையே சார்ந்திருந்தான்.

​கடற்கரை மணலைப் போன்ற திரளானதொரு சேனை ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடும் அவனுக்கு விரோதமாய் வந்த ஒரு சந்தர்ப்பத்தில், கர்த்தர் தாம் அவனுக்கு ஜெயமளிப்பதாக வாக்களித்ததுடன், அந்த ஜெயத்தைப் பெற்றுக்கொண்ட பின் அவன் செய்ய வேண்டியதாயிருந்த ஒரு காரியத்தையும் அவனுக்குக் கட்டளையிட்டார்.

​அது, "நீ அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய்" என்பதே! (யோசுவா 11:6). கர்த்தர் தாம் உரைத்திருந்தவாறே அந்த மாபெரும் சேனையை அவனுடைய கைகளில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கர்த்தர் தனக்குச் சொன்னபடியே செய்தான் (வச. 9).

​அதுவே அவன் செய்யும்படி தேவனால் நியமிக்கப்பட்டிருந்த கடைசி யுத்தமாயிருந்தது; யுத்தங்களெல்லாம் ஓய்ந்து, தேசம் அமைதலாயிற்று! இப்போது குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, இரதங்களைச் சுட்டெரித்துவிடும்படி தேவன் அவனிடம் கூறியது ஏன்?

​யோசுவா, தான் செய்த யுத்தங்கள் அனைத்திலும் கர்த்தரையே சார்ந்திருந்து ஜெயம் பெற்றது போல, அவனுடைய காலத்திற்குப் பின்னர் இஸ்ரவேல் புத்திரரின் பின்சந்ததியாரும் தங்கள் யுத்தங்களில் - மற்ற ஜாதிகளின் ராஜாக்களைப் போல குதிரைகளையும் இரதங்களையும் சார்ந்துகொள்ளாமல் (உபா. 17:16; I இராஜா 10:29) - தாம் ஒருவரே 'இஸ்ரவேலின் ஜெயபலமானவர்' என்பதை உணர்ந்து, தம்மை மாத்திரமே சார்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்விதம் கூறினார்!

​குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்துவிட்டால் அதற்குப் பின் அவைகளால் நடக்க முடியாமற்போய்விடும்; நடக்க முடியாத ஒரு குதிரையால் யாதொரு பயனுமிராதே! "ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது" (யோவான் 6:63) என்று கர்த்தராகிய இயேசு உரைத்திருக்கிறார்.

​நம் ஜீவியத்தில் 'பரிகரிக்கப்படும் கடைசிச் சத்துரு மரணம்' (I கொரி. 15:26) ஆகும். அக்கடைசியான யுத்தம் உட்பட, நம் அனைத்து யுத்தங்களிலும் நாம் கர்த்தரையே சார்ந்துகொள்வோமாயின், அவை அனைத்திலும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றிலும் ஜெயங்கொள்ளுவோம்! (ரோமர் 8:37).

​தாவீது மிகச் சிறந்ததொரு யுத்தவீரனாயிருந்தபோதிலும், அவன் தான் எதிர்கொண்ட ஒரு யுத்தத்திலாகிலும் ஜெயங்கொள்வதற்குக் குதிரைகளைச் சார்ந்துகொள்ளவில்லை. தன் ராஜ்யத்தின் முன்னேற்றத்துக்காக இரதங்களையும் குதிரைகளையும் சேகரித்துவைக்கவும் அவன் முற்படவில்லை (I நாளா. 18:3, 4).

​"சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம். அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்" (சங். 20:7, 8) என்பதே அவனது அனுபவமாக இருந்தது.

​ஆம்! மாம்சீக பெலனைச் சார்ந்திருக்கிறவர்கள் முறிந்துவிழுவார்கள்; கர்த்தரைச் சார்ந்திருக்கிறவர்களோ எழுந்து நிமிர்ந்து நிற்பார்கள்! ஆகவே நாம் 'மாம்சத்தின் மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனை செய்து, கிறிஸ்து இயேசுவில் மாத்திரம் மேன்மைபாராட்டுவோமாக!' (பிலி 3:3). கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயன்றி, வேறொன்றையும் குறித்து நாம் மேன்மைபாராட்டாதிருப்போமாக! (கலா. 6:14), நமது நம்பிக்கையும் மேன்மைபாராட்டலும் நமக்காகச் சிலுவையிலறையுண்டு மரித்த நமதாண்டவராகிய இயேசு மாத்திரமே!

​5. மோசம்போக்கும் சர்ப்பம்

​'உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பழைய பாம்பு' (வெளி. 12:9) என்றழைக்கப்படும் சாத்தான் தேவஜனங்களாகிய நம்மை மோசம் போக்கும்படி கையாளுகிற எளிதான வழிமுறை ஒன்றுண்டு. அது, நாம் மற்றவர்களுடைய தப்பிதங்களை மன்னியாதிருத்தல் ஆகும்.
​மன்னியாதிருத்தல்

​"எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள் நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன். சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே" (II கொரி. 2:10, 11) என்று அப். பவுல் கொரிந்திய சபையாருக்கு எழுதுகிறார்.

​அச்சபையிலிருந்த தேவஜனங்களில் ஒருவன் கொடிதானதொரு பாவத்திற்குள்ளானபோது அவனைச் சீர்திருத்தும் நோக்குடன் அவனுக்கு ஒரு சிட்சையளித்த அவர், அவன் சீர்திருந்திய பின்னர் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்படி அந்தச் சபைக்கு எழுதினார். அவ்விதம் செய்யாமற்போகிறவர்கள் சாத்தானாலே மோசம்போவார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார்.

​நாம் மற்றவர்களுடைய ஜீவியத்தில் ஏதேனும் தவறுகளைக் காணும்போது அவர்களை அற்பமாக எண்ணுவதும், நம்மில் அத்தவறுகள் இல்லாததினால் நம்மைக் குறித்து நாம் மேன்மையாக எண்ணிக்கொள்வதும் - "நீ உன் மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப் பார்க்கிலும் நான் பரிசுத்தன்" (ஏசாயா 65:5) என்று அவர்களுக்கு விரோதமாக நம்மைக் கர்வங் கொள்ளப்பண்ணி மோசம்போக்குகிற சர்ப்பத்தின் தந்திரமே!

​ஆகவே கர்த்தர் வருமளவும் நாம் காலத்துக்கு முன்னே யாதொன்றைக் குறித்தும், யாதொருவரைக் குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருப்போமாக! "மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்" என்று எழுதப்பட்டுள்ளதே! (I கொரி. 4:5; ரோமர் 14:4).

​மேலும் நமக்கு விரோதமாக மற்றவர்கள் செய்யும் தப்பிதங்களை நாம் அவர்களுக்கு மனப்பூர்வமாக மன்னியாமற்போனால், நம் பரமபிதாவும் நாம் செய்யும் தப்பிதங்களை நமக்கு மன்னியாதிருப்பார் (மத். 6:15; 18:33-35), அதாவது அவரால் இலவசமாக நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் பாவமன்னிப்பு ரத்து செய்யப்படும் என்ற வேதாகம சத்தியத்தைச் சாத்தான் நன்கறிவான்.

​ஆகையினாலேயே நமக்கு விரோதமாகத் தவறிழைக்கிறவர்களை நாம் மன்னியாதிருக்கத்தக்கதாக நம்முடைய இருதயத்தை அவன் கடினப்படுத்துகிறான். சாத்தானால் நாம் மோசம்போகாதபடிக்கு அவனுடைய இந்தத் தந்திரத்தைக் குறித்தும் நாம் விழிப்புணர்வடைவோமாக. நம் உள்ளத்தில் பகை, கசப்பு, விரோதம், வைராக்கியம் போன்றவற்றைச் சேமித்துவைக்கும்படி நம்மைத் தூண்டுகிற சாத்தானுக்கு நாம் இடங்கொடாமல், தெய்வீக அன்பு, மன்னித்தல், சாந்தம் போன்ற நற்பண்புகளையுடையவர்களாக நம்மைக் காத்துக்கொள்ளுவோமாக. அவ்வாறாயின் நம் ஆவிக்குரிய பயணம் பாதுகாப்பானதாக இருக்கும்; சாத்தான் நம்மை மேற்கொள்வதில்லை!
​முடிவுரை

​அருமையான தேவபிள்ளையே, கடந்த நாட்களில் மேற்கூறப்பட்டுள்ளவைகளில் ஏதேனும் ஒரு விதத்தில் நீ பிசாசுக்கு இடங்கொடுத்ததினால் அவனது தாக்குதலுக்கு இரையாகியிருப்பாயாகில், 'மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறவரா யிருக்கிற' கர்த்தரின் பாதத்தில் நீ சரணடைவாயாக! (சங். 146:8).

​பெருமையின் ஒரு சுவடாகிலும் உன்னில் காணப்படாதவாறு இன்றே நீ உன்னைத் தாழ்த்துவாயாக! நீ உன் சுயபெலனையோ, மாம்சத்துக்கேற்ற போராயுதங்களையோ சார்ந்துகொள்ளாமல், தேவ கிருபையையே பற்றிக்கொள்ளுவாயாக! பிறரைக் குற்றவாளிகளாகத் தீர்க்கத் துணியாமல், அவர்களது தப்பிதங்களைத் தாமதமின்றி மன்னித்துவிடத் தீர்மானிப்பாயாக!

​அவ்வாறுாயின் யுத்தத்தில் பராக்கிரமமுள்ளவராகிய கர்த்தர்தாமே சேனையின் அதிபதியாக உன்னோடிருந்து, உன் யுத்தங்கள் அனைத்திலும் உனக்கு மகத்தான ஜெயத்தை அருளுவார்; உன்னை விழத்தள்ளும்படியான சாத்தானின் சதித்திட்டங்களும், உன்னை மோசம்போக்கும்படியான அவனது தந்திரங்களும் அவமாகும்!

Post a Comment

0 Comments