உருக்குலைந்த அடையாளம்
ஒருநாள் இச்சுற்றுலா மையத்தைச் சுற்றிவந்த ஒரு குழுவினர், அதன் மறுமுனையில் மிகச் சிறப்பான விதத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு பிரத்யேக சிறு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே பல வண்ண செயற்கை மலர் வளையங்களினாலும், நீல நிற நாடாக்களினாலும் அலங்கரிக்கப்பட்ட இருபத்து நான்கு கல்லறைகள் இருந்தன.
அவற்றில் முதல் கல்லறையின் மேல் செதுக்கி வைக்கப்பட்டிருந்த வாசகம் ஒன்று, அச்சுற்றுலாக் குழுவினரை ஒருகணம் அப்படியே திகைத்து நிற்கச் செய்தது!
இங்கே தேவனால் மட்டுமே அறியப்பட்டிருக்கும் போர்வீரன் ஒருவன், மகிமையோடு இளைப்பாறுகிறான்"
என்பதே அந்த வாசகம். அது, தன் மரணத்திற்குப் பின்னர் தான் யார் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியாத ஒரு போர்வீரனின் கல்லறையாக இருந்தது. அவனது உடல், அவனுக்கு அறிமுகமானவர்களாலும் உறவினர்களாலுங்கூட இனங்கண்டுகொள்ள முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருந்தது என்பதையே அவ்வாசகம் சுட்டிக்காட்டியது. அதை ஆழமாகச் சிந்தித்த அந்தச் சுற்றுலாக் குழுவினரின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன.உலகத்தால் அறியப்படாத இரட்சகர்
அந்த வாசகம் நமது அருமை ஆண்டவராகிய இயேசுவின் தியாக மரணத்தை நமக்கு நினைவூட்டுகிறது. அருமை வாலிபனே, தேவகுமாரனாகிய இயேசு மனுக்குலத்தின் மீட்புக்காக மனிதனாக வெளிப்பட்டபோது, உலகம் அவரை அறியவில்லை. இதைக் குறித்து, "அவர் உலகத்தில் இருந்தார், உலகமோ அவரை அறியவில்லை" (யோவான் 1:10) என்று எழுதப்பட்டுள்ளது.
தம் வாழ்நாள் இறுதி வரை நன்மை செய்கிறவராகவே சுற்றித் திரிந்தபோதிலும், தாம் இன்னாரென்று உலகத்தால் அறியப்படாதவராகவே அவர் வாழ்ந்தார். முடிவிலே கல்வாரிச் சிலுவையில் சொல்லொண்ணா வேதனைகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டு, நீச மரணம் அடைந்தார். மனுக்குலத்தின் மீதுள்ள மாபெரும் அன்பினால் அவர் செய்த இந்த ஒப்பற்ற தியாகத்தை இன்றும் உலகம் உணராததாகவே இருக்கிறது.
"அவர் எல்லா மனுபுத்திரரிலும் மகா சௌந்தரியமுள்ளவர்! வெண்மையும் சிவப்புமானவர்! பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்! முற்றிலும் அழகுள்ளவர்!" (சங்கீதம் 45:2; உன்னதப்பாட்டு 5:10, 16). ஆனால், அவர் மனிதர்களை மீட்கும் பொருட்டாகத் தம்மைத் தாமே கோரச் சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தபோது, அந்தக்கேடடைந்தவராக, அழகற்றுத் தொங்கினார்!
அவரது கல்வாரி மரணத்தைக் குறித்து தீர்க்கதரிசனமாக ஏசாயா புத்தகத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
அவரது கல்வாரி மரணத்தைக் குறித்து தீர்க்கதரிசனமாக ஏசாயா புத்தகத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
"அவர் மனுஷரால் அசட்டை பண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவருமானார்."
அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.""மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்."
"மனுஷனைப் பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப் பார்க்கிலும் அவருடைய ரூபமும் அந்தக்கேடடைந்தபடியினாலே, அவரைக் கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்." (ஏசாயா 49:7, 53:2-4, 52:14).
கல்வாரியின் கோரக் காட்சிகள்
அவரது தலையில் முள்முடி சூட்டப்பட்டு, அதன்மேல் கோலினால் அடிக்கப்பட்டதினால் இரத்தம் பீறிட்டு வந்து முகத்தில் வழிந்தது. கன்னத்தில் அறையப்பட்டு, முகத்தில் உமிழப்பட்டு, தாடி மயிர் பிடுங்கப்பட்டதினால் அவமானம் அவர் முகத்தை மூடியிருந்தது. முதுகில் வாரினால் அடிக்கப்பட்டு, தசைகள் கிழிந்து தொங்கிக்கொண்டிருந்ததால், அவரது முதுகு உழுதுபோடப்பட்ட நிலம் போலிருந்தது. கைகளும் கால்களும் சிலுவை மரத்துடன் சேர்த்து ஆணிகளால் கடாவப்பட்டு, உடல் முழுவதிலும் தாங்கொண்ணா வேதனை நிலவியது.
தலைமுதல் கால் வரை உடலெங்கும் காயங்கள்! அந்த வழியாகச் சென்றவர்கள் தலைநிமிர்ந்து பார்த்தபோது, "இது ஒரு மனித உருவம் தானா?" என்று பிரமிக்கும் அளவுக்கு உலக இரட்சகர் உருக்குலைந்து போயிருந்தார். யாருக்காக இந்தப் பாடுகள்? நம் நிமித்தமாகவே அவர் அவமானத்தை எண்ணாமல் சிலுவையைச் சகித்தார்! (எபிரெயர் 12:2).
கிறிஸ்துவின் போர்வீரர்கள்
இங்கிலாந்தின் அந்தப் புகழ்பெற்ற கல்லறையில் கண்ட வாசகம், இன்று கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஊழியர்களையும் நமக்கு நினைவூட்டுகிறது. அவர்களுங்கூட உலகத்தால் அறியப்படாதவர்களே. உலகம் அவர்களை "பைத்தியக்காரர்கள்" என்று அழைத்தாலும், அவர்கள் கர்த்தருடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்கள்.
அப்போஸ்தலனாகிய பவுல் தன்னைக் குறித்துச் சொல்லும்போது, "நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்... நாங்கள் கிறிஸ்துவின் நிமித்தம் பைத்தியக்காரர்" (1 கொரிந்தியர் 4:9, 10) என்கிறார். கிறிஸ்துவின் அன்பு அவர்களை நெருக்கி ஏவினதினால், அவர்கள் உலக மேன்மைகளைக் குப்பை எனத் தள்ளிவிட்டுத் தங்களை அர்ப்பணித்துள்ளனர். அவர்களின் தியாகத்தை உலகம் மதியீனம் என்று கணிக்கிறது. ஆனால் கர்த்தரோ, "நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்" (யாத்திராகமம் 33:17) என்று கூறுகிறார்.
நித்திய கனம்
சொந்த தேசத்திற்காக உயிரைத் தியாகம் செய்த வீரர்களை ஒரு மன்னனால் கௌரவிக்க மட்டுமே முடியும். ஆனால் பரலோகத்தின் மாமன்னர் தம்முடைய உத்தமப் போர்ச்சேவகர்களை ஜீவிய காலத்திலும், மரண வேளையிலும், நித்தியத்திலும் கனம் பண்ணுவார்.
"ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்" (யோவான் 12:26) என்று ஆண்டவர் வாக்குக் கொடுத்துள்ளார்.
அருமை வாலிபனே, இவ்விதம் பரலோக ராஜாவினால் கனம்பண்ணப்படவிருக்கிற கிறிஸ்துவின் உண்மையுள்ள போர்ச்சேவகர் கூட்டத்தில் நீயும் ஒருவனாக இருக்க உனக்கு மனமுண்டோ? உனக்காகத் தன் கடைசிச் சொட்டு இரத்தத்தையும் சிந்திய அவருக்காக, உன் வாழ்வை அர்ப்பணிக்க முன்வருவாயா?
