இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்."
ஒரு பயணத்தின் படிப்பினை;
உல்லாசப் பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்த சுற்றுலாப் பயணக் குழுவினர் சிலர், உயரமான ஒரு மலைச்சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய வழிகாட்டி அவர்களை வழிநடத்திச் சென்ற பாதை மிகவும் குறுகலானதாக இருந்தது. அந்தக் குறுகலான பாதையில் பயணிகள் கால் பிசகி ஒரு அடி எடுத்து வைத்தாலும், மிக ஆழமான பள்ளங்களில் விழுந்துவிடக்கூடிய பல அபாயகரமான இடங்களும் இருந்தன. அப்படிப்பட்ட இடங்களில் ஆங்காங்கே தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டிருந்தன.
அந்த இடுக்கமான வழியினிமித்தம் சங்கடத்துக்குள்ளான அந்தக் குழுவைச் சேர்ந்த ஒரு இளம்பெண், அந்தப் பாதை மிகக் குறுகலாயிருப்பது குறித்தும், தங்களுக்குண்டாயிருக்கும் அசௌகரியங்களைக் குறித்தும் உரத்த சத்தமாக முறையிட்டு முறுமுறுத்துக்கொண்டே இருந்தாள். சற்று தொலைவில், வளைந்து செல்லுகிற ஒரு பாதையை அவள் தன் வழிகாட்டியிடம் சுட்டிக்காண்பித்து, "அதோ, சற்று தொலைவில் நம் கண்களுக்குத் தெரிகிறதே! அந்தப் பாதையில் நாம் சென்றிருக்கலாமே! இதை விட அது அகலமானதாக இருக்கிறது. அதுமட்டுமன்றி, அது நிழலுள்ளதாகவும் இருக்கிறது. அதன் இருபக்கங்களிலும் மிக அழகாக மலர்ந்திருக்கும் பூக்களை என்னால் காண முடிகிறது" என்று கூறினாள்.
வழிகாட்டி பதிலொன்றும் கூறாமல் மௌனமாக இருந்தார்.
ஆனால், அவர் தான் தெரிந்தெடுத்த பாதையிலேயே தொடர்ந்து அவர்களை நடத்திச் சென்றுகொண்டிருந்தார். நீண்ட நேரப் பயணத்திற்குப் பின் அவர்கள் அந்த மலையின் சிகரத்தை அடைந்தனர். அவர்கள் அந்தச் சிகரத்தை எட்டியவுடன், அந்த வழிகாட்டி அந்த இளம்பெண்ணை அழைத்து, அவர்கள் கடந்து வந்திருந்த வழியைச் சற்று திரும்பிப் பார்க்கும்படி கூறினார். அங்கிருந்து அவள் பார்த்தபோது, அவர்கள் கடந்து வந்த வழியையும், தான் செல்ல விரும்பிய அந்த வழியையும் - இரண்டு வழிகளையுமே அவளால் தெளிவாகக் காண முடிந்தது.
அவள் அவற்றைக் கண்ணுற்றபோது, தான் செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்ட அந்தப் பாதையில் அதிகமான ஆபத்துகள் நிறைந்த செங்குத்தான சரிவுகள் பல இருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள்.
அவள் அவற்றைக் கண்ணுற்றபோது, தான் செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்ட அந்தப் பாதையில் அதிகமான ஆபத்துகள் நிறைந்த செங்குத்தான சரிவுகள் பல இருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள்.
அப்பாதையில் தவறாக ஒரே ஒரு அடி எடுத்து வைத்தாலுங்கூட மரணம்தான் ஏற்படும் என்பதையும் அவள் விளங்கிக்கொண்டாள். அவளது கண்களுக்கு அழகாகத் தோற்றமளித்த பூக்கள், உண்மையில் மறைவான ஆபத்துகள் உள்ள பாதாளம் போன்ற ஆழமான குழிகளை மூடியிருந்தன. தன்னுடைய கண்களில் கண்ணீருடன் அவள் அந்த வழிகாட்டியின் பக்கமாகத் திரும்பி, தன்னைச் சரியான பாதையில் பாதுகாப்பாகக் கொண்டு வந்தமைக்காக அவருக்கு நன்றி கூறினாள்.
வாலிபனே, உன் பாதை தேவனால் முன்குறிக்கப்பட்டது;
புதிய சந்தோஷத்துடனும், புதிய தீர்மானங்களுடனும், புதிய கிருபையுடனும், புதிய அபிஷேகத்துடனும், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களுடனும் இந்த நாட்களுக்குள் பிரவேசித்திருக்கும் வாலிபனே, சர்வ ஞானியாகிய உன் தேவன் நீ கடந்து செல்ல வேண்டிய பாதையை உனக்காக முன்குறித்து வைத்திருக்கிறார். அவர் தாம் உனக்காகத் தெரிந்தெடுத்து வைத்திருக்கிற அப்பாதையில் உன்னைப் பாதுகாப்பாக நடத்திச் செல்லுவார். அவர் உன்னோடு கூட நடப்பதால் நீ கலங்கவோ, பதறவோ வேண்டியதில்லை.
அப்பாதையில் நீ வழிநடக்கையில், அந்த இளம்பெண்ணின் கண்களுக்கு விசாலமானதாகக் காட்சியளித்த பாதையைப் போல, இவ்வுலகின் விசாலமான பாதைகள் உன் உள்ளத்தை ஈர்க்கக்கூடிய சமயங்கள் உண்டாகக்கூடும். ஆனால், உன்னை நித்திய அழிவுக்கு நேராக நடத்தக்கூடிய அந்த விசாலமான வழிகளை நீ விரும்பாதே. தேவன் உன்னை நடத்தும் அந்தக் குறுகலான பாதையே உனக்குப் பாதுகாப்பானதாக இருக்கும். உன்னைப் பாதுகாக்கும்படியாகவே அவர் உன்னை அக்குறுகலான பாதையில் நடத்திச் சென்றார் என்ற உண்மையை, நீ நித்தியத்திற்குள் பிரவேசிக்கும் நாளில் விளங்கிக்கொள்வாய்.
ஏன் எனக்கு இந்தத் துன்பம்?
தேவன் உன்னை நடத்தும் வழிகளைக் குறித்து, "ஏன் எனக்கு இந்தப் பாதை? ஏன் எனக்கு மட்டும் இந்தத் துன்பம்?" என்று நீ அவரிடம் கேள்வி கேட்கக்கூடும். பயணிகளைப் பத்திரமாக அந்த மலைச்சிகரத்திற்கு நடத்திச் சென்ற வழிகாட்டியைப் போல, இப்போது அவர் உன் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அப்பாதையிலேயே உன்னைத் தொடர்ந்து நடத்திச் சென்று கொண்டிருக்கக்கூடும். நீ பொறுத்திருந்து பார். நீ தேவனோடு என்றென்றும் இருக்கும்படியாக நித்தியத்திற்குள் பிரவேசிக்கும்போது, இப்போது நீ எழுப்பக்கூடிய கேள்விகள் யாவும் அன்று அவருக்கு நன்றி செலுத்துதலாய் மாறிவிடும்.
அப்போது, "ஆண்டவரே, நீர் என்னை நடத்தி வந்த அந்தப் பாதைக்காக உமக்கு நன்றி; என் வாழ்வில் நீர் எனக்கு அனுமதித்த அந்தத் துன்பத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம். எனக்கு வேண்டுமென்று நான் விரும்பிய அந்தக் காரியத்தை, அந்தப் பொருளை நீர் எனக்குக் கொடுக்க மறுத்தமைக்காக உம்மை நான் ஸ்தோத்தரிக்கிறேன்" என்று ஆழ்ந்த நன்றியுணர்வுடன் நீ கூறுவாய்.
பரம வழிகாட்டியின் வாக்குத்தத்தம்
உன் பயணத்தில் நீ கடந்து செல்லும்படி நியமிக்கப்பட்டிருக்கும் பாதை ஒருவேளை இதற்கு முன் ஒருபோதும் நீ நடந்திராத பாதையாயிருக்கக்கூடும். நீ நடந்து செல்ல வேண்டிய பாதை இடுக்கமும், வழி நெருக்கமுமானதாயிருக்கலாம். அதைக் கண்டு நீ திகைக்கவும் கலங்கவும் வேண்டாம்.
"ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்" (மத் 7:14) என்றுரைத்த நமதாண்டவராகிய இயேசுதாமே உன் பரம வழிகாட்டியாயிருந்து, நீ நடக்க வேண்டிய சரியான வழியிலே உன்னைப் பாதுகாப்பாய் வழிநடத்திச் செல்வார்.
நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்" (சங் 32:8).
நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே" (ஏசாயா 48:17).
என்று அவர் உனக்கு வாக்குப்பண்ணுகிறார். உன்னை வழிநடத்திக் கொண்டிருக்கும் தேவன் சர்வ ஞானமுள்ளவர். நீ அவரை நம்பி அவருக்குப் பின்சென்றால் போதும்; நீ அடைய வேண்டிய இலக்கைச் சுகக்ஷேமமாகச் சென்றடைவாய்.
கீழ்ப்படிதலும் பாதுகாப்பும்
தேவ பிள்ளையே, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாகவே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம் (அப் 14:22). தேவன் உன்னை நடத்துகிற பாதையில் பல பாடுகளையும் சோதனைகளையும் அவர் உனக்கு அனுமதிக்கக்கூடும். அவை உன் சுய விருப்பத்திற்கு மாறானவையாகவோ, கடினமானவையாகவோ தோன்றலாம். அச்சமயங்களில் அந்த இளம்பெண்ணைப் போல நீ முறுமுறுப்பாயா? உன் சுய புத்தியின் மேல் சாய்ந்து உனக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழிகளை அவருக்கு ஆலோசனை சொல்ல முற்படுவாயா?
"மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்" (நீதி 14:12). ஆகவே நீ உன் சுய புத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
தேவன் தந்த ஏதுக்கள் (வழிகாட்டிகள்)
தேவன் தமது கிருபையினால் உன்னைச் செவ்வையான பாதையில் நடத்தச் சில ஏதுக்களை நியமித்திருக்கிறார்:
பெற்றோர்கள்:
உன்னை ஒழுங்குக்குட்படுத்தி நடத்தும்படி தேவபக்தியுள்ள பெற்றோரை உனக்கு வழிகாட்டிகளாக வைத்திருக்கிறார். மரண வழிகளுக்கு நீ தப்பி காக்கப்பட வேண்டுமாயின், உன் பெற்றோரின் போதகத்தைத் தள்ளாமல் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
தமது ஊழியர்களைத் தேவன் உனக்கு ஈவாகத் தந்திருக்கிறார். அவர்களுடைய ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், ஏற்ற காலத்தில் தேவன் உன்னை உயர்த்துவார்.
பரிசுத்த ஆவியானவர்:
பரிசுத்த ஆவியானவர் உனக்குப் போதித்து, உன்னைச் சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார். ஒவ்வொரு நாளும் அவருடைய வழிநடத்துதலுக்கு உன்னை முற்றிலும் ஒப்புக்கொடு.
முடிவுரை
ஒவ்வொரு கஷ்டத்தின் பின்னும் பெரியதோர் ஆசீர்வாதம் மறைந்திருக்கிறது. சோதனையின்றி கிரீடமில்லை; பாடுகளின்றி மகிமை இல்லை; சிலுவையின்றி சிங்காசனம் இல்லை. இஸ்ரவேல் ஜனங்களை கானானுக்கு அழைத்துச் செல்ல தேவன் வனாந்தர வழியாகவே நடத்தினார். அந்தப் பாதையில் முறுமுறுக்காமல் சென்றவர்கள் கானானைச் சுதந்திரத்துக்கொண்டனர்.
பாவ சிற்றின்பங்கள் வெளித்தோற்றத்தில் சந்தோஷத்தைத் தருவது போல் காணப்படலாம், ஆனால் அவற்றின் முடிவு நித்திய அழிவு! ஆகவே, "என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்" (சங் 17:5) என்று ஜெபித்து, உன்னை அவரிடம் கையளிப்பாயாக. உன் வருங்காலத்தைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். அவர் உன்னைத் தம்முடைய ஆலோசனையின்படியே நடத்தி, முடிவில் உன்னை மகிமையில் ஏற்றுக்கொள்வார்
பிரியமானவர்களே இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
